தலைநகர் சென்னை என்றாலே பலரையும் வாழ வைத்த ஊர். தொழில் வளர்ச்சியிலும் சரி, சுற்றுலா, பொழுதுபோக்கு அம்சங்களிலும் சரி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக திகழ்ந்து வருவது தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இதனாலேயே இங்கு இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை ஒருபோதும் மன நிறைவை தந்ததில்லை. நல்ல மழை பெய்து விட்டால் நகர் முழுவதும் தத்தளிக்க ஆரம்பித்து விடுகிறது. அதையும் தாண்டி வேலைக்கு செல்வோரின் நிலை மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறது.
ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டி வரும். இதனால் மாநகரப் பேருந்துகள் சரியான நேரத்தில் வந்து சேர முடிவதில்லை. உதாரணமாக இன்று காலை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் படாத பாடு பட்டு விட்டனர். காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை தி.நகர் செல்வதற்கு ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே வந்திருக்கும்.
அதுவும் ஏற்கனவே நிரம்பி வந்ததால் பேருந்து நிலையத்தில் நிற்காமல் சில மீட்டர் தூரம் தள்ளி சென்று நின்றது. ஓடிப் போய் ஏறுவதற்குள் அவசர அவசரமாக கிளம்பி போய்விட்டன. இதுபற்றி டிப்போவில் கேட்டால் ”வரும்… வரும்…” என்று அலட்சியமாகவே பதில் அளித்தனர். நேற்றுடன் ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறை முடிந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் என சொந்த ஊரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை சென்னை திரும்பினர்.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஒட்டுமொத்த நகரையும் சிரமத்திற்கு ஆளாக்கியது. வேளச்சேரி மட்டுமின்றி கோயம்பேடு, கிண்டி, தி.நகர், பிராட்வே, தாம்பரம் என நகரின் முக்கிய பேருந்து நிலையங்கள் ஸ்தம்பித்தன. நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கையோ குறைவாகவே காணப்பட்டது. அதாவது, போக்குவரத்து நெரிசல்களில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் புக் செய்து செல்ல பலரும் முயன்றனர். அதுவும் உடனடியாக கிடைக்காததால் தவிப்பிற்கு ஆளாகினர். எனவே விடுமுறை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல, மழை காலங்களிலும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஏனெனில் மழையில் மாட்டிக் கொள்வதை தவிர்க்க சொந்த வாகனங்களை வீட்டிலேயே நிறுத்தி விட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த விரும்புவர்.
சாய்பாபா சமாதி தினம் : மயிலாப்பூரில் திரண்ட பக்தர்கள்!
அவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் தேவைப்படுகின்றன. இதுதவிர மழைநீர் வடிகால் பணிகள் வேறு இன்னும் முழுமை பெறவில்லை. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. அதற்கான சிக்னல் தற்போதே கிடைத்துவிட்டது. தினசரி விட்டு விட்டு மழை பெய்து வாட்டி வதைத்து வருகிறது. எனவே எஞ்சியிருக்கும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
சேதமடைந்த நகரின் உட்புறச் சாலைகளை சீர்செய்ய வேண்டும். மழை காலம் தொடங்கிய பின்னரும், சென்னை நகரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து போதிய MTC பேருந்துகள் மற்றும் முன்னேற்பாடுகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.