சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் (ஒக். 04) அழைக்கப்பட்டிருந்தார்.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் (04) பாராளுமன்றத்தில் கூடிய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் இந்த முறைப்பாடு குறித்த விசாரணை நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தான்னால் மீறப்பட்டுள்ளது என்பதைக் குறித்த நபர் இங்கு ஏற்றுக்கொண்டமையால் இரு தரப்பினரின் இணக்கத்துக்கு அமைய நிபந்தனையுடன் குறித்த சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கமைய இது தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரி பிரசித்தமான பத்திரிகையொன்றிலும் சம்பந்தப்பட்ட முகப்புத்தகத்திலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லது பொதுவாகப் பாராளுமன்றம் தொடர்பில் அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்டால் பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் உரிமை பாராளுமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் காணப்படுவதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் எச்சரிப்பதற்கு அல்லது ஆறு மாதங்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் உள் நுழைவதைத் தடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும், ஏதாவது தவறு இழைக்கப்பட்டிருப்பதாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டால் அதனை உயர் நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தலைவரினால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், பாராளுமன்றத்தில் உள்ள சகல உறுப்பினர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் போலியான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பிரபல சிங்கள பத்திரிகையொன்றின் பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு முன்னிலையில் அண்மையில் அழைக்கப்பட்டனர். “பாராளுமன்றத்தில் திரவப்பாலுக்குத் தட்டுப்பாடு உறுப்பினர்கள் குழப்பம்” (மத்திசபே கன்டிமே தியர கிரி ஹிங்கவீ மந்திரிவருன் யக்கா நடதீ) என்ற தலைப்பின் கீழ் 2022 மார்ச் 09ஆம் திகதி பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த கட்டகொட முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய போலியான செய்தியின் ஊடாக ஒட்டுமொத்த பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்குப் பொது மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கட்டகொட தெரிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீடு பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், இச்சம்பவம் குறித்துத் தான் ஆராய்ந்து பார்த்தபோது அதற்கான தகவல்கள் எதுவும் இல்லையென்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கமைய போலியான தகவல்களை வெளியிட்டமையின் ஊடாக ஒட்டுமொத்தப் பாராளுமன்றத்தின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருவதாகவும், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் மிகவும் பொறுப்பான முறையில் செய்திகளை அறிக்கையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதில், நீதிமன்ற செயற்பாட்டிற்குச் செல்லாமல் இதனைத் தீர்த்துக் கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கினர். இதற்கமைய போலியான தகவல்களை அறிக்கையிட்டமை தொடர்பில் கவலை தெரிவித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை முன்னைய செய்திக்குக் கொடுத்த அதேயளவு முன்னுரிமையை வழங்கி செய்தியொன்றை வெளியிட வேண்டும் என்றும், அதன் பிரதி ஒரு வாரத்துக்குள் பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பாராளுமன்றம் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான செய்திகளை வெளியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கு இணங்குவது என்ற நிபந்தனையின் அடிப்படையில் இவ்விடயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு எழுத்துமூலமாகத் தெரிவிக்கவும் குழுவின் தலைவர் உத்தரவிட்டார்.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பட்டாலி சம்பிக்க ரணவக்கவின் ‘வட்ஸ்அப்’ அழைப்புக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சட்ட அனுமதியின்றி பெற்றுக் கொண்டமையினால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையுடன் தொடர்புபட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாக இங்கு புலப்பட்டது. இது தொடர்பில் மேலும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை எதிர்வரும் 18ஆம் திகதி குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல, கௌரவ கோகிலா குணவர்த்தன மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.