ஒன் சைடு கேம் ஆடுகிறார்க: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி குற்றச்சாட்டு!

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தேர்தல் ஆணைய கடிதத்துக்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதாக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த முடியவில்லை. மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக திரட்டப்பட்ட தகவல்களை ஆராயும் பணியில் அக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர் எய்ம்சும், மதுரை எய்ம்சும். ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது.” என்று குற்றம் சாட்டினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அசாம், தமிழகம், ஹிமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், பீகார், ஜம்மு-காஷ்மீர் ஆகிய ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை, இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால், இன்னமும் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனிடையே, அதன் திட்டமதிப்பும் கூடி விட்டது. இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனால், அந்த மருத்துவமனை கட்டுமானப்பணி ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டதே இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து திறக்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மந்தகதியில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.