திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கியக் களம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா அக்.6-ல் தொடங்குகிறது.
இது குறித்து ஆட்சியர் ச.விசாகன் கூறியதாவது:
திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அக்.6-ம்தேதி மாலை 6 மணிக்கு ஆட்சியர்தலைமையில் நடைபெறும் விழாவில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சு.ஸ்ரீமதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். தினசரி காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழா அக்.16 வரை நடைபெறுகிறது.
தொடக்க நாளன்று காலை 7 மணியளவில் திண்டுக்கல் மாநகரின் 8 முனைகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாண வர்கள் பங்கேற்கும் அறிவுச்சுடர் மெல்லோட்டம் நடைபெறுகிறது.
அதே நாளில் ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ எனும் இயக்கம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. காலை 11 முதல் 12 மணி வரை அனைத்து கல்லூரிகளிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடைபெறுகிறது.
அன்று மாலை 4.30 மணியளவில் சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அருகிலிருந்து புத்தகத் திருவிழா மைதானம் வரை கலைஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கலைப் பேரணி நடைபெற உள்ளது.
புத்தகத் திருவிழாவில் 125 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அரங்குகளில் பல ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.
தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நிறைவு விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இலக்கியக் களத் தலைவர் மனோகரன், நிர்வாகச் செயலாளர் கண்ணன், பொருளாளர் மணி வண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.