பைக்காரா படகு இல்லத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி: ஆயுதபூஜை,  விஜயதசமி விடுமுறை திரொலி ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா  பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். நீலகிரி  மாவட்டம் ஊட்டி – கூடலூர் சாலையில் சுமார் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா  அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த  அணையில் உள்ள  நீரை கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு  குடிநீர் திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர்  விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அணையில் சுற்றுலாத்துறை  கட்டுபாட்டில் உள்ள படகு குழாம் உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  இங்கு வருகை புரிந்து படகு பைக்காரா அணையில் படகு சவாரி செய்வது வழக்கம்.  இங்கு இயக்கப்படும் ஸ்பீட் படகு பிரசித்தி பெற்றதாகும். நீரை கிழித்து  கொண்டு செல்லும் ஸ்பீட் படகில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம்  காட்டுவார்கள். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பெய்த பருவமழையால்  பைக்காரா அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. தொடர்ந்து அணையின்  மொத்த கொள்ளளவான 100 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா  பயணிகள் வருகை அதிகாித்துள்ளது. அதற்கேற்ப காலாண்டு தேர்வு விடுமுறை  விடப்பட்டுள்ளதாலும், ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை காரணமாகவும் சுற்றுலா  தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பைக்காரா படகு இல்லத்திலும் சுற்றுலா  பயணிகள் கூட்டம் காணப்படும் நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு  சவாரி செய்து வருகின்றனர். குழுவாக வர கூடியவர்கள் மோட்டார் படகில் இயற்கை  காட்சிகளை பார்த்தவாறு பயணித்து மகிழ்ந்தனர்.  இதேபோல் பைக்காரா அருவி,  சூட்டிங்மட்டம் பகுதிகளிலும் கூட்டம் காணப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.