விழுப்புரம் அருகே திமுக எம்எல்ஏ-யின் பிறந்தநாளுக்கு விதிகளை மீறி அவரின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என இளைஞர் ஒருவர், விமர்சனம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் லட்சுமணனின் 50-வது பிறந்தநாள் விழா, கடந்த 30-ம் தேதி அவரின் ஆதரவாளர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதற்காக விழுப்புரம், கோலியனூர், வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு ஏராளமான பேனர்கள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.
இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என வளவனூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு புகார் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சமூக வலைதளங்களில் நேற்று வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில் தலையில்லா பொம் மையை இளைஞர் ஒருவர் சாட்டையால் அடித்தவாறு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் பேசியுள்ளதாவது:
விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணனின் ஆதரவாளர்கள் வளவனூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பேனர்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து எஸ்பிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே யும், எம்எல்ஏ அலுவலகம் அருகிலும், பேனர் வைத்துள்ளனர்.
விழுப்புரத்தில் அரசு சொத்துக்களில் விளம்பர போஸ்டர் ஒட்டி சேதப் படுத்துகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இருந்தால் மற்றவர்கள் போஸ்டர் ஒட்டுவார்களா? என கேள்வி எழுப்பி இளைஞர் பேசியுள்ளார். இந்த வீடியோ விழுப்புரம் மாவட்டத்தில் வைர லாகியுள்ளது.