பல ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆனந்த விகடன்’ இதழ் பேட்டிக்காக எழுத்தாளர் சுஜாதாவைச் சந்தித்தபோது, இப்படிச் சொன்னார். ‘‘வரும் காலங்களில் எல்லாமே ரிமோட்டாக மாறப் போகிறது. டிரைவர்லெஸ் கார் வந்தாலும் ஆச்சரியமில்லை. (எப்போவோ வந்துடுச்சு!) அதேபோல், ரிமோட் மூலம் இங்கிருந்தே எங்கோ இருக்கும் காரையும் ஓட்டும்படி தொழில்நுட்பம் வந்தாலும் வரும்!’’ என்றார்.
அது இப்போது நடந்திருக்கிறது. அதைச் செய்திருப்பவர் பிரதமர் மோடி. டெல்லியில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் விழாவில்தான் மோடி, ரிமோட் மூலம் ஸ்வீடனில் உள்ள ஒரு காரை இங்கிருந்தே ஓட்டிக் களிப்படைந்திருக்கிறார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், Indian Mobile Congress கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேச வந்தார் மோடி. இந்த மைதானத்தில்தான் ஆசியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தின் முதல் நாள் 5G தொழில்நுட்பத்தின் பராக்கிரமங்களைச் சொல்லும்விதமாக நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில்தான் மோடியின் காரோட்டும் சம்பவம் நடந்திருக்கிறது. 2G காலத்திலிருந்தே ரிலையன்ஸ் இல்லாமலா? இந்த 5G அலைக்கற்றையின் பராக்கிரமங்களைப் பற்றி விளக்கியவர், ரிலையன்ஸ் ஜியோவின் சேர்மன் ஆகாஷ் அம்பானி. VR என்று சொல்லப்படும் Virtual Reality மூலம், பல விஷயங்களைக் கண்டுகளித்து மகிழ்ந்திருக்கிறார் பிரதமர் மோடி.
அப்படியே, எரிக்ஸன் என்றொரு ஸ்டாலுக்கு வந்தவர், மால்களில் உள்ள கம்ப்யூட்டர் கேம் போல் இருக்கும் ஒரு சமாச்சாரத்தைப் பற்றி, ‘‘யே க்யா ஹேய்.. ’’ என்று வியந்திருக்கிறார். சட்டென அவரை ஸ்டீயரிங்கைப் பிடித்து கார் ஓட்ட வைத்து விட்டார்கள். அது நிஜமாகவே ஒரு காரின் இருக்கை/ ஸ்டீயரிங்/பிரேக் போன்ற அம்சங்கள். ஆனால், ரிமோட் மூலம் இயங்கும் கார். அதாவது, டெல்லியில் இருந்தபடியே ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடனில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரை இயக்கினார் மோடி. அது ஸ்வீடனில் உள்ள ஒரு இண்டோர் கோர்ஸ் டிரைவிங் ஏரியா என்பதால், தைரியமாகக் கார் ஓட்டி என்ஜாய் செய்திருக்கிறார் மோடி. கோன்களாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அந்த பார்க்கிங் போன்ற ஏரியாவில்… கோன்களில் இடிக்காமல் ரிவர்ஸ் எடுத்து… ஃபார்வேர்டு போய் என்று டிரைவிங் ஸ்கூலில் லைசென்ஸ் எடுக்கும் மாணவர் போல் அவர் கார் ஓட்டியது ரசனையாகவே இருக்கிறது.
இதற்குப் பின்னால் இருப்பது அதிவேகத்தில் இயங்கும் 5G நெட்வொர்க் தொழில்நுட்பம்தான் என்று அவருக்கு விளக்கியபின், அந்தத் தொழில்நுட்பத்துக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்றிருக்கிறார் மோடி.
அதாவது, இந்த 5G தொழில்நுட்பம், வெறும் நெட்வொர்க், செல்போன் போன்றவற்றுக்கு மட்டுமில்லை; இதை வைத்து அட்டானமஸ் டிரைவிங் என்று சொல்லக்கூடிய டிரைவர்லெஸ் கார்களையும் இயக்கும் அளவு இது ஓர் அட்வான்ஸ்டு டெக்னாலஜி என்பதுதான் ஹைலைட்.
இந்தத் தொழில்நுட்பம், அட்டானமஸ் டிரைவிங்கில் V2V, V2X என இரண்டு தானியங்கி விஷயங்களைச் செய்யக் காத்திருக்கிறது. V2V என்பது Vehicle to Vehicle. அதாவது, ஒரு வாகனத்தில் இருந்து கொண்டே இன்னொரு வாகனத்தை இயக்குவது. இது டிரைவிங் ஸ்கூல்களுக்கு மிகவும் பயன்படலாம். நாம் கணினியில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திலிருக்கும் கணினியை Any Desk போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இயக்குகிறோம் இல்லையா… அதேபோன்றதொரு விஷயம்.
V2X என்பது Vehicle to Everything. இது மிகவும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பம். கொஞ்சம் சுவாரஸ்யமானது. காரிலிருந்து எப்படிப்பட்ட விஷயங்களையும் ஆப்பரேட் செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு பாதசாரிகள், வேறு ஏதேனும் எலெக்ட்ரானிக் பொருட்கள், ட்ராஃபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை இயக்கிக் கொள்ளலாம்.
சில, ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில்… ‘ரைட்ல போ… லெஃப்ட்ல வர்றானுங்க பாரு.. ஸட்ரெய்ட்ல செம டிராஃபிக்’ என்று ஏதோ ஒரு குடோனில் இருந்து இத்தாலியின் ஒரு குறுக்குச் சந்துக்குள் கார் ஓட்டும் ஹீரோவுக்கு வழி சொல்லுவார் ஹீரோவின் நண்பர். அதேபோன்றதொரு தொழில்நுட்பம், இந்தியாவுக்குள் வரவிருப்பதற்கு அச்சாணிதான் இந்த 5G.
இன்னும் இதையெல்லாம் தாண்டி, ADAS (Advanced Driver Assist System), AVP (Automated Valet Parking) – (‘சினிமாவுக்கு அவசரமாச்சு… நீயா போய் பார்க் பண்ணிக்கோ’ என்று காருக்கு ஆர்டர் போட்டுவிட்டு பாதியிலேயே இறங்கிக் கொள்ளலாம்), TMS (Traffic Management System) – (தூரத்தில் இருக்கும் சிக்கல்களை / சிக்னல்களைக் கண்டறிந்து கார் தானாகவே ஆட்டோமேட்டிக் பிரேக்கிங்கை/ஸ்டீயரிங்கைப் பயன்படுத்தும்), ATP (Autonomous Truck Platooning).. (ட்ரக் போன்ற ஹெவி வெஹிக்கிள்ஸுக்கான தொழில்நுட்பம்… ஒரு நெருக்கடியான இடத்தில் ட்ரக்கை பார்க்கிங் செய்வதற்கு உதவுவது… ஒரு ஆம்புலன்ஸ் ட்ரக் டிராஃபிக்கில் சிக்கிக் கொள்ளும்பட்சத்தில், VR தொழில்நுட்பத்தை வைத்து கனெக்டட் ரோபோ ஹார்டுவேர் மூலம் டாக்டர் மருத்துவமனையில் இருந்து சொல்லச் சொல்ல… ஆம்புலன்ஸிலேயே ஆன் தி வே சர்ஜரி நடப்பது.)
– இப்படி ஏகப்பட்ட அட்டானமஸ் அம்சங்கள், எழுத்தாளர் சுஜாதா சொன்னதைத் தாண்டி நடக்க இருக்கிறது இந்த 5G தொழில்நுட்பத்தில். எல்லாம் ஓகே! எல்லாத் தொழில்நுட்பங்களும் எதிர்ப்பதமாக ஆகாமல் இருந்தால் சரி!