சின்னசேலம் அருகே சுடுகாடு செல்லும் வழியில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சி விற்பனையாளர்களை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்தி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியின் அனுமதியோடு, சுடுகாடு செல்லும் வழியில் , கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சிலர், மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை எங்களுக்கு செலுத்தினால் தொடர்ந்து கடை நடத்தலாம்.
மீறி விற்பனை செய்தால், உங்கள் கடைகள் சேதத்திற்குள்ளாகும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், ” தங்களுக்கு சொந்தமான இடத்தில் மாட்டிறைச்சி கடை நடத்திவருகிறோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய வகையில் சிலர் மிரட்டுகின்றனர்.
அதே பகுதியில் தொடர்ந்து எவ்வித அச்சுறுத்தலுமின்றி கடை நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.