சாம்பியன்ஸ் லீக் தொடரின் மூன்றாவது கேம் வீக் நடந்து முடிந்திருக்கிறது. முதல் இரண்டு சுற்றுக்களில் கிடைத்த அதிர்ச்சிகர முடிவுகள் இந்தச் சுற்றில் பெரிதாக இல்லையென்றாலும் கோல்களுக்கு பஞ்சம் இல்லாமல்தான் சென்றது. ஒரே அதிர்ச்சியெனில் அத்லெடிகோ மாட்ரிட் மற்றும் கிளப் பூருக் அணியிடம் தோற்றிருக்கிறது. இன்டர் மிலனுக்கு எதிராக பார்சிலோனா தோல்வியைத் தழுவ, பிஎஸ்ஜி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் டிராவே செய்திருக்கின்றன. சொதப்பிக்கொண்டிருந்த லிவர்பூல், செல்சீ வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றன.
எர்லிங் ஹாலண்ட் இப்போதும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் மிரட்டியிருக்கிறார். நான்கு நாள் இடைவெளியில் 5 கோல்கள் அடித்திருக்கிறார்.
எர்லிங் ஹாலண்ட்…. எர்லிங் ஹாலண்ட்… எர்லிங் ஹாலண்ட்…
இந்தப் பெயரை கடந்த சில வாரங்களில் பல நூறு முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். திரும்ப திரும்ப ஊடகங்கள் அவர் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பதாக நிச்சயம் உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேறு வழியில்லை. தன் புதிய அணிக்காக 11 போட்டிகளில் 19 கோல்கள் அடித்து நொறுக்கியிருக்கும் அவரைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா என்ன? இதோ, இப்போது சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடிய 45 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்திருக்கிறார்!
பிரீமியர் லீக் தொடருக்கு ஹாலண்ட் வந்தபோது அவர் அவ்வளவு எளிதாக இந்த லீகுக்கு தகவமைத்துக்கொள்ளமாட்டார் என்று பலரும் கருதினார்கள். பல முன்னணி வீரர்களுக்குமே பிரீமியர் லீகில் செட் ஆக கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் ஹாலண்ட் கொஞ்சம் கூட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கெதிரான முதல் போட்டியிலேயே 2 கோல் அடித்து தன் வேட்டையைத் தொடங்கினார் அவர். அதன்பிறகு இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே கோலடிக்கத் தவறியிருக்கிறார். அதிலும் கூட அசிஸ்ட் செய்து ஒரு கோலுக்குக் காரணமாக இருந்தார் அவர்.
கிறிஸ்டல் பேலஸ், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், மான்செஸ்டர் யுனைடட் என மூன்று அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்து மிரட்டியிருக்கிறார். பிரீமியர் லீக் வரலாற்றில் தன்னுடைய முதல் 8 போட்டிகளிலேயே 3 ஹாட்ரிக்குகள் அடித்த ஒரே வீரர் இவர்தான். இப்படி ஒரு தொடக்கத்தை வேறு எந்த வீரரும் கொண்டிருந்ததில்லை. சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் தான் விளையாடிய 3 போட்டிகளில் 5 கோல்கள் அடித்திருக்கிறார் ஹாலண்ட். இன்று அதிகாலை எஃசி கோபன்ஹேவன் அணியோடு விளையாடிய மான்செஸ்டர் சிட்டி 5-0 என வென்றது. இந்தப் போட்டியின் முதல் பாதியிலேயே 2 கோல்கள் அடித்தார் ஹாலண்ட். இதன்மூலம் 22 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 28 கோல்கள் அடித்திருக்கிறார் அவர். அடுத்து பிரீமியர் லீக் போட்டி இருப்பதால், இரண்டாவது பாதியில் அவருக்கு ஓய்வளித்தார் கார்டியோலா. இல்லையெனில், இன்னொரு ஹாட்ரிக்கும் அடித்திருப்பார்.
மான்செஸ்டர் சிட்டியைப் போலவே மற்ற பிரீமியர் லீக் அணிகளான லிவர்பூல், செல்சீ எளிதாக வெற்றி பெற்றன. ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய லிவர்பூல் கொஞ்சம் அப்படி இப்படித் தடுமாறினாலும், இந்த முடிவு (2-0) அந்த அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். தொடர்ந்து ஏமாற்றி வரும் அந்த அணியின் வீரர்கள் முகமது சலா, டிரெண்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட் இருவருமே இந்தப் போட்டியில் கோலடித்திருப்பது கூடுதல் நம்பிக்கை. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது லிவர்பூல். இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனின் முதலிரு சுற்றுகளிலுமே வெற்றி பெறத் தவறிய செல்சீ 3-0 என ஏசி மிலனை வீழ்த்தியது. புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்ற பிறகு அந்த அணி இவ்வளவு நம்பிக்கையொடு விளையாடியது இந்தப் போட்டியில்தான். சொல்லப்போனால் மிலனின் மோசமான ஆட்டம் செல்சீ வீரர்களின் வேலையை எளிதாக்கியது. அந்த அணிக்காக வெஸ்லி ஃபொஃபானா, ரீஸ் ஜேம்ஸ், பியர் எமரிக் அபாமெயாங் ஆகியோர் கோலடித்தனர்.
ஏசி மிலன் தோற்றிருந்தாலும், இன்டர் மிலன் அணி மிக முக்கிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. பார்சிலோனாவை அந்த அணி 1-0 என வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரம் பார்சிலோனாவின் கையே ஓங்கியிருந்தது. 72 சதவிகிதம் அந்த அணியே பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் கால்பந்தைப் பொறுத்தவரை பால் பொசஷன் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லையே. கடைசியில் கோல் போஸ்ட்டைத் தாண்டி கோல் அடித்தது என்னவோ 28 சதவிகிதமே பந்தைக் கையில் வைத்திருந்தது இன்டர் மிலன்தான்.
முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் ஹகன் சாலனாலு அடித்த கோல் வெற்றிக்கான கோலாக மாறியது. இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டியின் முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. பலம் வாய்ந்த பேயர்ன் மூனிச் இந்தப் பிரிவில் இருப்பதால், இவ்விரண்டு அணிகளுமே பேயர்னுக்கு எதிராக தோற்றிருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கே அடுத்த சுற்றுக்குள் நுழைய அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளோடு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது இன்டர் மிலன். 3 புள்ளிகளே பெற்றிருக்கும் பார்சிலோனாவுக்கு அடுத்த 3 போட்டிகளுமே அதிமுக்கியமானவை.