2048 வீரர்கள்.. 121 பல்நோக்கு மையங்கள்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்

Weather Update in Tamil Nadu: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 2048 பேரிடர் மீட்பு வீரர்கள் தயாராக உள்ளனர் மற்றும் மழை மட்டுமின்றி புயலினை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியபோது, “வரும் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 26 ஆம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு 35 முதல் 75 சதவீதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்

இதனை அடுத்து, மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் சார்பில் 2048 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் 799 பேர் தமிழ்நாடு சார்பிலும் 1249 பேர் மத்திய அரசு சார்பிலும் தயராக உள்ளனர். அரசு எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளது. 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சராசரி மழையை விட அதிக மழை பெய்யும் என்று தகவல் உள்ளது. புயல் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும் புயல் வந்தாலும் எதிர்நோக்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம்

சென்னை மாநில கட்டுப்பாட்டு மையம் எண் 1070. மாவட்ட அளவில் எண் 1077 கொடுக்கப்பட்டுள்ளது. 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இடப்பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் தேவைக்கேற்ப பாதுகாப்பான பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தபடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்க, பேரிடர் மேலாண்மைக்கு என எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் உள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்கள் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

வானிலை முன்னறிவிப்பு வாங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசிற்கு என பிரத்யேகமாக வானிலை முன்னறிவிப்புங்களை வழங்க கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் 100 தானியியங்கி வானிலை மையம், 1400 தானியியங்கி மழை மானி பொறுத்துவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.