கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பரிவேட்டை நாளை நடக்கிறது.
இதையொட்டி நாளைஅதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 11-30 மணிக்கு கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோயிலை விட்டு வெளியேவரும்போது, போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.
ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசூரகனை, வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத்தொடர்ந்து வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு செல்கிறது. பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.
அங்கு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி, வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோயிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பகவதி அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகவதி அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடையும் வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். நாகர்கோவில், கொட்டாரம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திருவிழா நடக்கும் மகாதானபுரத்துக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.