தாய்லாந்தின் நோங் பூவா லாம்பூ வடகிழக்கு மாகாணத்தில் ஒரு பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்தக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் மதிய உணவு நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் 22 சிறுவர்கள் உட்பட மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 34 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய காரணங்களுக்காக காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.