திருப்பூர்: திருப்பூர் விடுதியில் 3 சிறுவர்கள் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். திருமுருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாள்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2 சிறுவர்கள் காப்பகத்திலேயே உயிரிழந்துள்ளனர்; ஒருவர் வழியில் பலியானார். உடல்நிலை பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விடுதியில் விசாரணை மேற்கொண்ட பின், திருப்பூர் காவல் காணையர் பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா? என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும். சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அக்டோபர் 4ம் தேதி சிறுவர்களுக்கு சுண்டல், பொரி கடலை, லட்டு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று வெறும் ரசம் சாதம் மட்டுமே கொடுத்துள்ளனர். கொடுக்கப்பட்ட ரசம் சாதத்தில் மாணவர்கள் வெறும் ரசத்தை மட்டுமே குடித்துவிட்டு சாதத்தை கீழே போட்டுள்ளனர். மாணவர்களின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.