கெட்டுப்போன உணவை உண்ட 3 சிறுவர்கள் பலி; சிகிச்சையில் 11 பேர் – விசாரணை குழு அமைப்பு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று (அக். 6) காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த உணவை உண்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உணவு கெட்டுப்போயிருந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், சிகிச்சை பலனின்றி 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த உணவை உண்ட 11 சிறுவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருக்கும் சிறுவர்களுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இறந்த மாணவர்கள் மூவரும் 10 வயது முதல் 13 வயதுக்குள்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. போலீசார் விடுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர். மேலும், அச்சிறுவர்கள் நேற்றிரவே உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் பொதுமக்கள் இடைய பரவிவரும் நிலையில், அதுகுறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விடுதி முறையான அனுமதி பெற்றுதான் இயங்கிவருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க சமூக பாதுகாப்பு  நலத்துறையின் இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நேரடியாக காப்பகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் பிறகு, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.