பொன்னியின் செல்வியாக மாறிய தமிழிசை; அதிர்ந்து போய்க்கிடக்கும் 2 மாநில அரசுகள்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தற்போது மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவும், வரும் 2024ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் பதவியை அலங்கரிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான மாநிலக் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இதில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் முதன்மையானவராக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளார்.

பிரதமர் மோடி தெலங்கானா மாநிலத்துக்கு சென்றால் அவரை வரவேற்க செல்லாத அளவுக்கு பாஜக மீது அதீத வெறுப்பை காட்டும் முதல்வர் சந்திரசேகரராவ் என்பதுதான் அவரை பற்றிய கூடுதல் தகவல்.

இப்படிப்பட்ட முதல்வர் சந்திரசேகர ராவை தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் ஆட்டம் காண வைத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் தெலங்கானாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது தெலங்கானாவில் சாதாரண பொம்மை ஆளுநராக இருப்பார் என்று, டிஆர்எஸ் கட்சியின் தலைமை கணக்குப்போட்டது.

ஆனால், தமிழிசையோ தான் ஒரு முன்னாள் அரசியல்வாதி மட்டுமல்லாமல், நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என, தனது அதிரடியால் பதிலடி கொடுக்க தொடங்கினார்.

ஆளுநர் தமிழிசைக்கு தெலங்கானா மாநில அரசு ஹெலிகாப்டர் வழங்காமல் தொடர்ந்து சாக்குபோக்கு காட்டி வந்தது. இந்த சூழலில் தெலங்கானாவில் நடந்த புகழ்பெற்ற நிகழ்வுக்கு செல்ல தமிழிசை திட்டமிட்டு இருந்தார்.

அது, நக்சல்கள் மிகுந்த பகுதி என்பதால் வாகனத்தில் செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதோடு, சவாலான காரியம் என கூறப்பட்ட போதிலும், நிகழ்வில் பங்கேற்பதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விரும்பினார்.

இதையடுத்து தமிழிசைக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தருமாறு மாநில அரசிடம் ஆளுநர் மாளிகை கேட்டுள்ளது. ஆனால் கடைசி வரை மாநில அரசானது ஹெலிகாப்டர் வழங்காமல் இழுத்தடித்ததால் சாலை மார்க்கமாக பயணிக்க தமிழிசை சவுந்தரராஜன் முடிவு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாநில டிஜிபி ‘குறிப்பிட்ட இடம் முழுவதும் பாதுகாப்பு குறைவான பகுதி. எனவே அங்கு காரில் செல்வது என்பது சவாலான ஒன்று என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்றும், ஒருவேளை காரில் சென்றாலும் சரியான நேரத்துக்கு போக முடியாது’ என்றும் கூறியுள்ளார்.

இதை கேட்ட தமிழிசை, ‘உங்களால் முடிந்தால் பாதுகாப்பு கொடுங்கள். இல்லாவிட்டால் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று டிஜிபியிடம் கூறிவிட்டு காரில் ஏறியுள்ளார்.

இச்சம்பவம், தெலங்கானா மாநில ஊடகங்களில் பிரேக்கிங் செய்தியாக மாறியது. அதே சமயம் பாதுகாப்பு கருதி 3 வாகனங்களில் மாறி மாறி பயணம் செய்து குறிப்பிட்ட நேரத்துக்குள் தமிழிசை சவுந்தரராஜன் அந்த நிகழ்ச்சிக்கு சென்றடைந்தார்.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் போட்ட அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்ததும் அமைச்சர்கள், காவல் துறையினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இதுபோல் களத்தில் இறங்கி மாணவிகள் பிரச்சனை என்று ஒவ்வொன்றிலும் தமிழிசை சவுந்தரராஜன் முத்திரை பதித்த பின்னர் தான் சந்திரசேகர ராவ் மகன் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று கேடிஆர் மக்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.

இப்படியாக நாள்தோறும் களத்தில் இறங்கி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவதைப்பார்த்து தெலங்கானா மாநில அரசு அதிர்ந்து போய் கிடக்கிறது.

தெலங்கானாவில் நிலைமை இப்படி இருக்கையில், புதுச்சேரியிலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடி மேலோங்கி பறப்பதாக, அரசியல் தெரிந்தவர்கள் அள்ளித்தெளிக்கின்றனர்.

சமீபத்தில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டதால் டென்ஷன் ஆன தமிழிசை சவுந்தரராஜன் ‘அரசு வேடிக்கை பார்க்காது. பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு மின் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்’ என, அதிரடி காட்டியது புதுச்சேரியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ‘புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் நிலவி வருகிறது. துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரியில் துணை ராணுவத்தை இறக்கியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு தெரியாமலேயே மின் துறையை தனியார் மயத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டு இருக்கிறார்’ என கூறியுள்ளது தமிழிசை செளந்தரராஜனின் அதிரடிக்கு சான்று என பரவலாக சொல்லப்படுகிறது.

இதன் வாயிலாக ஒரு புறம் தெலங்கானா மாநில அரசியல், மறு புறம் புதுச்சேரி மாநில அரசியல் என, ரியல் பொன்னியின் செல்வியாக மாறி இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் மீது பாஜக மேலிடம் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.