புதுச்சேரி: புதுவையில் மின்துறை தனியார்மயத்துக்கு எதிராகப் போராடி வரும் மின் ஊழியர்கள் கூட்டமைப்புடன், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் தீபாவளி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து, பணிக்கு திரும்புவதாக மின்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து அத்துறை ஊழியர்கள் 6 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு, பொது மக்களும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்தப்பிரச்னை தொடர்பாக விவாதிக்கும் வகையில், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் நேற்று மாலை அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
புதுவை மின்துறை தனியார்மய விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்ப்பது குறித்தும், போராட்டத்துக்கு தீர்வுகாண சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது, உரிய மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ரங்கசாமி தலைமையில், மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் ராஜிவ்வர்மா, மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் அருள்மொழி, பொதுச் செயலர் வேல்முருகன், தேசிய மின்துறை ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் துபே, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, புதுவை மின்துறை தனியார்மயத்துக்கான ஒப்பந்த அறிவிப்பால் ஏற்படும் பாதிப்புகள், அதில் உள்ள பொதுமக்கள், ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் குறித்தும் மின்துறை ஊழியர்கள் தரப்பில் கருத்து தெரிவித்து, பல கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதற்கு, மின்துறை தனியார்மய நடவடிக்கையின் பலன்கள், ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பு, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் தரப்பிலும் விரிவாக விளக்கப்பட்டு, போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர், முதல்வர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, மின் ஊழியர்களிடம் கலந்தாலோசித்து, நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறிச்சென்றனர்.
அதையடுத்து போராட்டக்குழு நிர்வாகிகள் கூறுகையில், “வேலைநிறுத்தப்போராட்டத்தை தற்காலிகமாக தீபாவளி வரை தள்ளி வைக்கிறோம். உடன் அனைவரும் பணிக்கு திரும்புகிறோம். தனியார்மயம் விவகாரம் தொடர்பாக அரசுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு எம்எல்ஏக்களுக்கும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரவுள்ளோம். கைதானவர்களை விடுதலை செய்யக் கோருவோம். பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டால் அடுத்த நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தனர். இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.