தமிழ் சினிமா ஹீரோக்களில் சாக்லெட் பாய் ஆக மின்னியவர் ரகுமான். இப்போதும் அதே ஸ்மார்ட் மேனாக புன்னகைக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மதுராந்தக சோழனாக அசத்தியவரிடம் பேசினேன்.
என்ன சொல்றார் மணிரத்னம்..?
”சந்தோஷமா இருக்கு. இப்படி ஒரு சரித்திரக் கதையில நானும் பங்களிச்சது பெருமையா இருக்கு. எல்லா நடிகர்களுக்குமே மணி சாரோட ஒரு படத்திலாவது நடிச்சிடணும்னு ஆசையிருக்கும். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ல தான் அதுக்கான வாய்ப்பு அமைஞ்சது” ரசனையாகப் பேசுகிறார் ரகுமான்.
ஒரு மலரும் நினைவுகள் கேள்வி. தமிழ்ல நீங்க நடிக்க வந்தது எப்படி?
”சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ல வருவேன். நடிகராவேன்னு நான் கனவு கண்டதில்ல. பிறந்தது இங்கேதான். ஆனா, வளர்ந்தது அபுதாபியிலும், ஊட்டியிலும் தான். மலையாள ஜாம்பவான் இயக்குநர் பத்மராஜன் சார்னால, நான் நடிகரானேன். அப்ப ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். அந்த டைம்ல சினிமா பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அங்கே முதல் படம் மம்முட்டியோட நடிச்சிருந்தேன். மலையாளத்துல படங்கள் நடிச்சிட்டிருந்த போதுதான் பாசில் சார் தமிழ்ல ஒரு படம் பண்ணப் போறார்னு என்னை நடிக்கக் கேட்டாங்க.
இங்கே தமிழ்ப் படத்துல ஒர்க் பண்ற ஆட்கள் எல்லாருமே மலையாளத்துல என்னோட நடிச்சவங்கதான் என்கிற தைரியத்துல மொழி தெரியாத சூழலில் தமிழ்ல நடிக்க வந்தேன். அதன்பிறகு சில காரணங்களால பாசில் சார், அந்த படத்தை இயக்கல. ஆனா, எஸ்.ஏ.சந்திரசேகர்னு ஒருத்தர் இயக்குறார்னு சொன்னாங்க. கதையும் வேற… அந்தப் படம் தான் `நிலவே மலரே’. நதியா, பேபி ஷாலினினு அவங்களோட ஏற்கெனவே மலையாளத்துல நான் நடிச்சிருந்ததால, இங்கே எளிதா இருந்துச்சு. அப்ப விஜய் ரொம்ப குட்டிப்பையனா இருந்தார். ஷங்கர் சார் அப்ப உதவி இயக்குநரா இருந்தார். நான் தமிழ்ல நடிச்சிட்டிருக்கும் போதுதான் தெலுங்கிலும் வாய்ப்புத் தேடி வந்துச்சு..”
‘புதுப்புது அர்த்தங்கள்’ல செமையா அசத்தியிருந்தீங்களே..?
”என் கரியர்ல மறக்கவே முடியாத படம். தமிழ்ல எனக்கு நிழல்கள் ரவி சார்தான் குரல் கொடுத்திருந்தார். தெலுங்கில் எஸ்.பி.பி.சார் எனக்காக டப்பிங் பேசியிருப்பார். கவிதாலாயாவில் இருந்து என்னை நடிக்கக் கேட்டப்ப, நான் பெங்களூருவில் இருந்தேன். உடனே சென்னை வந்து பாலசந்தர் சாரை பார்த்தேன். என்கிட்ட கதையை சொன்னார். ஆனா, அவ்ளோ பெரிய ஜாம்பவானைச் சந்திச்ச சந்தோஷத்திலும் பதற்றத்திலும் இருந்தேன். `இது கமல் சார் பண்ண வேண்டிய சப்ஜெக்ட்… நீ பண்றே… உன்னை யாரும் சரியா பயன்படுத்தலைனு… இதை நீ பண்ணு’னு ஒரு அப்பா தன் பிள்ளைக்கிட்ட சொல்ற மாதிரி என்கிட்ட கே.பி. சார் சொன்னார். இன்னிக்கு வரை யாரையும் சந்திச்சு, நான் வாய்ப்புக் கேட்டதில்ல. கே.பி. சார் மாதிரி ஜாம்பவான்கள் படங்கள் எல்லாம் என்னைத் தேடி வந்ததை அதிர்ஷ்டமா பாக்குறேன்” என்கிறார் ரஹ்மான்.