உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1960ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இளைஞர்கள் பேரலையாக எழுந்தனர். அப்படி எழுந்த இளைஞர்களில் முலாயம் சிங் யாதவ்வும் ஒருவர்.
இதன் பிறகு கடந்த 1967ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவ் முதன்முறையாக போட்டியிட்டார். முதல் தேர்தலில் வெற்றியை பெற்றதால் முலாயம் சிங் யாதவ் எம்எல்ஏ ஆனார்.
இதை தொடர்ந்து கடந்த 1975ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது முலாயம் சிங் யாதவ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்தார்.
இதன் பிறகு, கடந்த 1992ம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். 1993ல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கை கோர்த்து உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டினர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளதோடு, நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பிரணாப் முகர்ஜிக்கு அடுத்ததாக முலாயம் சிங் யாதவ் ஜனாதிபதி ஆவார் என கணிக்கப்பட்டன. ஆனால் அப்படி நடக்கவில்லை.
முலாயம் சிங் ஆக்டிவ்வாக இருந்தபோதே மகன் அகிலேஷ் யாதவை அரசியலுக்கு கொண்டு வந்து மாநில முதல்வராக்கினார். பின்னர், மகனுடன் முரண்பட்ட காரணத்தால் ஓரம் கட்டப்பட்டார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதற்கு பாஜகவை எதிர்த்து போராடிய தலைவர்களில், முலாயம் சிங் யாதவ் மிக முக்கியமானவர் என பரவலாகவே பேசப்படுவது வழக்கம்.
இந்நிலையில் 82 வயதாகும் முலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை வரையில் சிசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ் பிறகு ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேதாந்தா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு நிபுணர்களை கொண்ட மருத்துவ குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சைகள் அளித்து வருகின்றபோதிலும் முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக மருத்துவமனை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் மேதாந்தா மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றுவிட்டு திரும்பிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறும்போது, ‘முலாயம் சிங் யாதவின் குடும்பத்தினரையும், மகன் அகிலேஷ் யாதவையும் சந்தித்தேன்.
முலாயம் சிங் யாதவ் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக குணம் அடைய நாட்கள் ஆகும் என டாக்டர்கள் கூறினர்’ என மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.