முதலாவது மற்றும் இரண்டாவது உலக யுத்தங்கள், இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரை நினைவுகூறும் நோக்கில் நடத்தப்படும் பாதுகாப்புப் படைவீரர்களின் நினைவான பொப்பி தினத்தின் முதலாவது பொப்பி மலரை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதற்கமைய 2022 பாதுகாப்புப் படையின் பொபி நினைவுதினத்தை முன்னிட்டு முப்படைகளின் பிரதானியும், இலங்கை இராணுவ முன்னாள் வீரர்கள் சங்கத்தின் போசகருமான கௌரவ ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இதனை குறித்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அணிவித்தார்.
அதன் பின்னர், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் பொப்பி மலர்கள் அணிவிக்கப்பட்டன. அது மாத்திரமன்றி பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆகியோருக்கும் பொப்பி மலர்கள் அணிவிக்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ முன்னாள் வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான லெப்டினட் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, மேஜர் பி.கே.எஸ் சாந்திலால் கம்கானம்கே, கப்டன் ரி.எம்.எச்.மடுகல்ல, ஏ.பத்மசிறி மற்றும் சூலானி சிறிமெவன் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.