கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ’21-ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும்.
பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது ஆய்வில் தெரியவந்தது. பிரதமர் மோடி அறிமுகம் செய்த ”ஸ்வச் பாரத்” திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் கழிவறைகள் கட்டப்பட்டது. இதனால் பெண்கள் கல்வியை கைவிடும் சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்கள் பள்ளிக்கு வந்து சுகாதாரமான முறையில் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை நாம் சரி செய்ய வேண்டும் என கூறினார்.
நாகரீக வளர்ச்சி குறித்து பேசிய தமிழிசை, பெண்களாக இருப்பதால் நமக்கு கட்டுப்பாடுகளும் உள்ளது. குறிப்பாக ஆடை கட்டுப்பாடு பெண்களுக்கு அவசியமாகும். நாகரீகம் என்பது நாம் உடுத்தும் உடையில் அல்ல நமது அறிவின் வளர்ச்சி தான் நாகரீகமாகும். மேலும் நமது கலாச்சாரத்தை உலகில் எங்கு சென்றாலும் நாம் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் அவர்களுக்கென ஒரு குறிக்கோள் வைத்து அதில் முன்னேற வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டும் என கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை தனியாக இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அவரை பார்த்துக்கொள்ள தயாராக இருந்த போதும், சுய விருப்பத்தால் அவர் தனியாக இருப்பதாக கூறினார். மேலும், தெலுங்கானாவில் தெலுங்கு கேட்க முடியவில்லை என வந்துவிட்டார். அவர் தனியாக இருக்க வேண்டும் என்று விரும்பி வீடு வாங்கிய போது எனக்கு அதிர்ச்சி தகவலாக தான் இருந்தது என தெரிவித்தார். பின்னர் ராஜராஜன் சோழன் சர்ச்சை குறித்து பேசிய ஆளுநர், கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை, பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும் நான் மட்டும்தான் தமிழ்நாடு என நகைச்சுவையாக தெரிவித்தார்.