கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் சக ஊழியர்களை சுங்கச்சாவடி நிர்வாகம் பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 3-வது நாளாக தொடர்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட திருமாந்துறை ஆகிய பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் செங்குறிச்சி சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. துவக்கத்தில் கட்டணச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு மனிதத் திறன் மூலம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஃபாஸ்ட் டேக் தானியங்கி செயலி மூலம் சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தாமதமின்றி பயணிக்கும் சூழல் உருவானதால் வாகன ஓட்டிகளும் தானியங்கி செயலியை பயன்படுத்து துவங்கினர்.
இதன் எதிரொலியாக சுங்கச்சாவடி நிறுவனங்கள் மனித திறனை குறைக்கும் முயற்சியில் இறங்கிவருகிறது. இதனடிப்படையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் 268 ஊழியர்களில் 56 பேரை பணி நீக்கம் செய்வது தொடர்பாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நோட்டீஸ் வழங்கிஅக்டோபர் 1 முதல் வேலைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கடந்த இரு தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் பிடித்தமின்றி பயணிக்கிறது.
இதனிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்று புதுச்சேரி மத்திய தொழிலாளர் நல ஆணையர் ரமேஷ்குமார் முன்னிலையில், டோல்கேட் நிர்வாகம் மற்றும் டோல்கேட் ஊழியர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், போராட்டம் 3-வது நாளாக தொடர்வதாக தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கார்ல்மார்க்ஸ் தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட் ஊழியர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், தமிழக தொழிலாளர் நல ஆணையரைக் கொண்டு, பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்து சென்றுள்ளார்.