அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று அக்காட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 15 ஆவது கவுன்சிலர் ரவி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான இணைப்பு விழாவில் புதிதாக இணைந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
தொடர்ந்து எடப்பாடி பயணியர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”33 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி, பிரதான எதிர்க்கட்சி என பெருமைக்குரியது அதிமுக. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை உடைக்கவும், முடக்கவும் பார்க்கின்றனர், அது ஒருபோதும் நடக்காது.
ஒரு கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சி தலையிட முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்களை அமைச்சர் ஒருவரே இழிவு படுத்தி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கதையாக உள்ளது. அதற்கு மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினோம்” எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM