புதுச்சேரி: விஸ்வ ஹிந்து பரிஹத் சார்பில் புதுச்சேரியில் நடந்த துர்கை பூஜை ஊர்வலத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புதுவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் சார்பில் துர்கா பூஜை நடைபெற்றது.
துர்கா பூஜை விழாவில் 9 நாட்கள் விரதம் இருந்து 10-வது நாள் துர்கை சிலையை கடலில் கரைப்பது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா கொண்டாடப்படவில்லை. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
9 நாட்கள் விரதம் இருந்து தினமும் பூஜை செய்த துர்கா சிலையை வேனில் வைத்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு வந்தனர். வடமாநில இசையுடன் ஆண்கள் துர்க்கை சிலையை கடலில் கரைத்தனர்.
இதேபோல் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் துர்கா பூஜை இன்று நடந்தது. இவ்விழாவில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, துர்கா திருவுருவம் பிரதிஷ்டை செய்து யாகங்கள், சிறப்பு பூஜைகள் கலை நிகச்சிகள் நடைபெற்றன. துர்கை சிலையை ஊர்வலமாகக் கொண்டு வந்து கடலில் கரைக்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
சாரம் அவ்வை திடலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் டிராக்டர் வாகனத்தை ஓட்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், விஹெச்பி வட தமிழ்நாடு அமைப்பு செயலர் ராமன், ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் நேரு வீதி வழியாக கடற்கரையை அடைந்து, சிலை கரைக்கப்பட்டது.