திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பதி, :திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனர்.திருப்பதி திருமலையில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து தரிசனங்களும் நேற்று முதல் மீண்டும் துவங்கின. இதையடுத்து, திருமலையில் நேற்று காலை முதல், பக்தர்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியது. தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்தனர்.

latest tamil news

திருமலையில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் 10 கி.மீ., தொலைவு வரை பக்தர்கள் தரிசன வரிசை நீண்டது. காத்திருப்பு அறைகளில் உள்ள பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், 63 ஆயிரத்து 579 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 34 ஆயிரத்து 524 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, நள்ளிரவு 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தர்கள், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். திருமலை மலைப்பாதை காலை 3:00 மணிக்கு திறக்கப்பட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு மூடப்படுகிறது.தரிசனம், வாடகை அறை குறித்து புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் 18004254141, 93993 99399 என்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.