24 குழந்தைகள் உட்பட 37 பேர் பரிதாப பலி:தாய்லாந்தில் மாஜி போலீஸ் அதிகாரி வெறி| Dinamalar

பாங்காக் : தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்து வெறித்தனமாக சுட்டதில், 24 குழந்தைகள் உட்பட, 37 பேர் பலியாகினர். இதைத் தவிர, அவர் வெறித்தனத்தின் உச்சத்தில் தன் குழந்தையையும், மனைவியையும் சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாய்லாந்தின் வடக்கு மாகாணமான நோங் புவா லம் பு என்ற இடத்தில், 2 – 5 வயதுள்ள குழந்தைகளை பராமரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

வேலைக்கு செல்லும் பெற்றோர், பகல் நேரத்தில் தங்கள் குழந்தைகளை இந்த மையத்தில் விட்டுச் செல்வது வழக்கம்.நேற்று இந்த பராமரிப்பு மையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், கையில் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். உள்ளே நுழைந்ததும், சரமாரியாக துப்பாக்கியால் சுடத் துவங்கினார். பின், கத்தியாலும் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களை குத்தினார். இதில், எந்த பாவமும் அறியாத 24 பச்சிளம் குழந்தை கள் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தன. பராமரிப்பு மையத்தின் ஊழியர்கள் 13 பேரும் இந்த தாக்குதலில் இறந்தனர். இவர்களில் ஒருவர் எட்டு மாத கர்ப்பிணி. தாக்குதல் நடத்தி முடித்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தாக்குதல் நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் உள்ள வீட்டில் ஒருவர், தன் குழந்தை மற்றும் மனைவியுடன் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், குழந்தை பராமரிப்பு மையத்தில் தாக்குதல் நடத்திய நபர், தன் மனைவி, குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் பெயர், பான்யா காம்ரூப் என்பதும், போலீஸ் அதிகாரியாக பணியாற்றி, போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இவர், எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த தாக்குதல், தாய்லாந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.