ஏன் ஹிந்து மதத்தின் மீது மட்டும் குறி? திரைத்துறையினருக்கு அமைச்சர் கேள்வி

பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கி உள்ள இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாசும், சீதை கதாபாத்திரத்தில் கிரித்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ந்தேதி வெளியாக உள்ள படத்தின் டீசர் கடந்த 2ம்தேதி வெளியானது.

இந்த டீசர் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. தொழில்நுட்ப குறைபாடுகளால் புனிதமான ராமாயண கதாபாத்திரங்கள் காமெடியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் டீசரை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியிருப்பதாவது: எங்களுடைய மத நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் டீசரில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர்கள் மாற்றம் செய்துள்ளனர். திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற மதங்கள் என்று வரும்போது, படைப்பாளிகள் படைப்பு சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.

பாபா மகாகலின் சொமேட்டோ விளம்பரம், சன்னி லியோனின் ராதா பாடல், சப்யசாச்சியின் மங்களசூத்ரா விளம்பரம், காளி படத்தின் போஸ்டர், ஓ மை காட் திரைப்படம், ஆஷ்ரம் வெப் சீரிஸ் என ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? ஏன் நாங்கள் மட்டும் குறியாக உள்ளோம்? பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் இந்த முறை தவறானது. இந்த படைப்பு சுதந்திரத்தை மற்ற மதங்கள் மீதும் எடுத்துக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.