திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் கெட்டுப்போன காலை உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வந்த பிறகே குழந்தைகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 சிறுவர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்திய பின்னர் 14 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.காப்பகத்தில் குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது அங்கு மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கெனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் தரணிஷ், கௌதம், சபரீஷ் , சதீஷ் ,குணா , அர்ஷத் , ரித்தீஷ், ஸ்ரீகாந்த், மணிகண்டன் ஆகிய 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்கள் மூவரும் 10 வயது முதல் 13 வயதுக்குள்பட்டவர்கள் என்பதும், சிறுவர்கள் கெட்டுப் போன உணவை உட்கொண்டதால் உயிரிழந்ததும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் காப்பகத்தில் திருப்பூர் ஆணையர் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்கள் இடம் கேட்டறிந்தார். குழந்தைகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் உயிரிழந்த சிறுவர்களின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் மாவட்ட ஆட்சியர் வினீத் கூறியுள்ளார். இதனையடுத்து திருப்பூர் விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் நேற்று உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நியமித்துள்ள விசாரணை கமிட்டியானது இன்று காலை 11 மணி அளவில் துவங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.