சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவ கோரி நடிகர் பெஞ்சமின் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிகிச்சையில் உள்ள நடிகர் போண்டாமணியே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முழு செலவையும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அவரைத்தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி ரூ.1லட்சம் கொடுத்து போண்டாமணிக்கு உதவியிருந்தார். மேலும் வடிவேலு உள்பட பல நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர். அதிமுக சார்பிலும் ரூ.1 லட்சம் நிதி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வதுபோல் நடித்து வந்த இளைஞர் பிரித்தீவ் என்பவர், போண்டாமணி சிகிச்சைக்கான மருந்து வாங்க, அவரது ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு, சுமார் ரூ.1 லட்சம் நகைக்கடையில் கார்டை ஸ்வைப் செய்து நகை வாங்கி மோசடி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போண்டாமணி, இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், ரூ.1 லட்சம் மோசடியாக திருடிய ராஜேஷ் பிரித்தீவ் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.