கழுகு தாக்கியதால் காயமடைந்த தேவாங்கை நக்சல் தடுப்பு படையினர் காப்பாற்றி மீட்டுள்ளனர். அழிந்து வரும் உயிரினமான தேவாங்கை காப்பாற்ற வனத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருது என பல்வேறு வன உயிரினங்களோடு சர்வதேச அளவில் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கழுதைப்புலி, தேவாங்கு, சிங்கவால் குரங்குகள் போன்ற அரிய வகையான உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அத்திகடவு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நக்சல் தடுப்பு அதிரடி படையினர், அடர்ந்த வனத்தில் உடலில் பலத்த காயங்களோடு உயிருக்கு போராடி கொண்டிருந்த தேவாங்கு ஒன்றை கண்டனர். அதனை பத்திரமாக மீட்ட அதிரடிப்படை வீரர்கள் காட்டை விட்டு வெளியேறியவுடன், காரமடை வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இரவில் மட்டுமே தனது இரையை தேடும் குணமுடைய இந்த சிறிய வகை தேவாங்கை ஆய்வு செய்த வனத்துறை மருத்துவ குழுவினர், கழுகு தாக்கியதில் அதன் ஒரு கண் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை கண்டறிந்து உடனடியாக அதற்கு முதற்கட்டமாக வெள்ளியங்காடு அரசு கால்நடை மருத்துவனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் காயமடைந்த தேவாங்கை மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு சென்று, வெறும் 300 கிராம் எடை கொண்ட இதன் உயிரை காப்பாற்ற நுணுக்கமான அறுவை சிகிச்சையும் செய்து மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM