நாடு முழுவதும் நவராத்திரி (அ) துர்கா பூஜை பண்டிகை கடந்த 10 நாள்களாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்களும், வெவ்வேறு சடங்குகளும், வித்தியாசமான கொண்டாட்டங்களும் உள்ளன. பெரும்பாலும், பெண் தெய்வங்களின் ஒன்பது அவதாரங்களை கொண்டாடும் நோக்கிலும், ராவணனை ராமர் வதம் செய்ததை கொண்டாடும் வகையிலும் இந்த நவராத்திரி (அ) துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவடத்தில் நடைபெற்ற தசரா ஊர்வலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த பேரணியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கமிட்ட நுற்றுக்கணக்காணோர் தங்களின் கைகளில் துப்பாக்கிகள், வாள்கள் ஆகியவற்றை ஏந்தி வந்ததுதான் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அங்கிருந்தோர், தங்களின் ஆயுதங்களோடு வீடியோ எடுத்தும், செஃல்பி எடுத்தும், சத்தமாக ஒலிக்கப்பட்டுக்கொண்டிருந்த பாடல்களுக்கு நடனமாடியும் வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
थाना शोहरतगढ़ क्षेत्रान्तर्गत शस्त्र पूजन कार्यक्रम में परम्परागत रुप से शस्त्र संग जुलुस होता आया है। अन्य आरोपों के संबंध में जांच क्षेत्राधिकारी शोहरतगढ़ को दिया गया ।
— SiddharthnagarPolice (@siddharthnagpol) October 6, 2022
துர்கா பூஜை பண்டிகையின் 10 நாளான தசரா (அ) விஜய தசமி அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கொண்டாட்டங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்றும் இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் போலீசாரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர்.
இதுபோன்ற, பதிவு ஒன்றுக்கு ட்விட்டரில் பதிலளித்த போலீசார்,”தசரா அன்று ஆயுதஙக்ளுடன் ஊர்வலம் செல்வது அப்பகுதியின் பாரம்பரியமான ஒன்று” எனக் குறிப்பிட்டனர். தொடர்ந்து, மற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.