தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக பல சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் முதல் தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வில் அனைத்து வகை பாடப்பிரிவினை எடுத்து படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம். தமிழ் மொழியில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை அதிகரிக்க இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1,500 மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15-ம் தேதி, 843 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து 2.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
100 மதிப்பெண்களுக்கு நடைபெறக்கூடிய தேர்வில் இருந்து, மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 750 மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்தும் மீதமுள்ள 750 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 1,500 மாணவர்களுக்கு, மாதம் 1,500 ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.