கோவில்பட்டி: கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான நில எடுப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக கோவில்பட்டி அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் 2வது பெரிய தொழில் நகரம் இது. கோவில்பட்டியில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள், போதிய அளவில் இல்லை. கடந்த ஆட்சியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவில்பட்டியைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
மாவட்ட எல்லையில் இருந்து பிரிந்து கோவில்பட்டி ஊருக்குள் வரும் வழியில் தனியார் கல்லூரி அருகே மாநில சாலையானது நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, சிதம்பராபுரம், திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு வழியாக நாலாட்டின்புத்தூரில் தேசிய நான்கு வழிச்சாலையில் இணையும் வகையில் சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் திட்டப்பணிகள் தொய்வடைந்தன. சுற்றுச்சாலை திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் கூறும்போது, ‘தொழில் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளில் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் புறவழிச்சாலை திட்டங்கள் உள்ளன.
தொழில் வளர்ச்சியில் சிறந்ததோர் இடத்தை எட்டியுள்ள கோவில்பட்டியில் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டம் மந்தநிலையில் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடியையும், வஉசி துறைமுகத்துக்கான கனரக சரக்கு போக்குவரத்து, அனல் மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சோலார் நிறுவனங்கள், தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா மையங்களையும் இணைக்க ஏதுவாக இருக்கும். எனவே கோவில்பட்டி சுற்றுச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து விரைவுபடுத்த வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘கடந்த 2010ம் ஆண்டே கோவில்பட்டி புறவழிச்சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டு கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கைவிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டியில் இருந்து தனியார் கல்லூரி பின்புறமாக கொண்டு செல்வது, மற்றொன்று நான்குவழிச்சாலையின் மறுபுறம் அதாவது, வேளாண் பல்கலைக்கழகம் பின்புறம் வழியாக கொண்டு செல்வது என புறவழிச்சாலை தொடர்பாக இரண்டு விதமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதற்காக நில எடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன’ என்றனர்.
அமைச்சருக்கு வைகோ கடிதம்
புறவழிச்சாலை திட்டம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவில்பட்டி 3 மாவட்ட பகுதிகளை அதாவது விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகியவற்றை சாலை போக்குவரத்தில் இணைக்கும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. ராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக செல்கின்ற நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் கோவில்பட்டி நகரின் வழியாகத்தான் அன்றாடம் சென்று வருகின்றன.
இதன் காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டும், வளர்ந்து வரும் கோவில்பட்டி நகரம் மற்றும் கோவில்பட்டி நகரைச் சுற்றியும் விரிவடைந்து வரும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் 17 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கோவில்பட்டி புறவழிச்சாலை திட்டப்பணிகளை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.