“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” என்ற நகைச்சுவை திரைப்படத்தில் அந்த ஊரில் தவறுகளே நடக்காது. அப்படி ஏதாவது பிரச்னை வந்தாலும் ஊர் மக்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள். அந்த ஊர் மக்களைக் குற்றவாளிகளாக்கி, ஒரு வழக்கையாவது பதிவு செய்து விடமாட்டோமா என அந்த காவல் நிலையத்தில் உள்ள போலீஸார்கள் அல்லோலப்படுவார்கள். இந்த கதைக்களம் அப்போது விநோதமாக தெரிந்தாலும், இப்போது அது போலவே நிஜமாக ஒரு கிராமம் இருப்பதை அறிய நேரும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது.
ஆம்… தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரெகாட்லபள்ளி என்ற கிராமம், கடந்த 40 ஆண்டுகளாக `வழக்குகளே இல்லாத கிராமம்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது.
மொத்தம் 930 பேர், 180 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இருந்த போதும் கட்சி, மதம் எனப் பிரியாமல் இவர்கள் அனைவரும் கிராமம் என்ற ஒருமித்த சிந்தனையில், கிராமத்தின் வளர்ச்சிக்காகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. எங்கு பார்த்தாலும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கிராமம் குற்றமே நிகழாத கிராமமாக நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
கிராமத்தில் ஏதாவது ஒரு பிரச்னை எழும்பட்சத்தில், போலீஸாரை நாடாமல், மக்கள் முதலில் பஞ்சாயத்தை நாடுகின்றனர். பிரச்னை அந்த இடத்திலேயே சுமூகமாக முடிக்கப்படுகிறது. அதோடு 63 நபர்களை கொண்ட பெரியவர்கள் குழு ஒன்று, கிராமத்தில் உள்ள மக்களின் குறைகளை சரி செய்வதோடு, அவர்களின் பிரச்னைகளையும் கண்டறிந்து களைகிறதாம்.
அதனால் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் காவல் நிலைய படிக்கட்டுகளைக் கூட மிதிப்பதில்லை என்கின்றனர்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்த கிராமத்தை `வழக்கு இல்லாத கிராமம்’ என்று குறிப்பிட்டு அதிகாரபூர்வ அறிவிப்பை, ரெகாட்லபள்ளி மாவட்ட நீதிபதி ஸ்ரீதேவி அறிவித்தார். கடந்த செவ்வாய்க் கிழமையன்று அந்த சான்றிதழை அதிகாரிகளிடம் நீதிபதி ஒப்படைத்தார்.