ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் தண்ணீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்: தமிழக அரசுக்கு பாசன விவசாயிகள் கோரிக்கை

ஆர்எஸ்.மங்கலம்: ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்கள் முழுவதையும் தூர்வாரி கருவேல முட்புதர்களை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்மாய், ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாயாகும். 48 குறிச்சிகளை (கிராமங்கள்) கொண்ட இக்கண்மாய் சுமார் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இக்கண்மாயில் சுமார் 1 கிலோ மீட்டருக்கு தலா ஒரு மடை வீதம் மேலமடை, கீழமடை, வல்லமடை, புல்ல மடை, ராமநாத மடை, சிலுக வயல் மடை, செட்டியமடை, பட்டாபிராம மடை, ஒரளிமடை, பெருமாள் மடை, பிச்சனாகோட்டை மடை,பெத்தார் தேவன்கோட்டை மடை,

நோக்கன்கோட்டை மடை, பெரியாண்பச்சேரி மடை, சூரமடை, கல்லுடைப்பு மடை, பொன்னாக்கோட்டை மடை, தாமரை மடை, புலி வீரதேவன் கோட்டை மடை, ராவமடை என 20 மடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்மாயின் மொத்த கொள்ளளவு சுமார் 1205 மில்லியன் கனஅடி ஆகும். இவ்வளவு நீர் தேக்கும் திறன் கொண்ட இக்கண்மாய் ஆர்.எஸ் மங்கலம் மட்டுமின்றி அதன் சுற்றுபுற கிராமங்களில் உள்ள 72 சிறு கண்மாய்கள் மூலம் சுமார் 5,500 ஏக்கர் நேரடி பாசனமும், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் மறைமுக பாசனமும் என சுமார் 12,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இச்சிறப்புமிக்க கண்மாய் பாசனத்தால்தான் ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக இப்பகுதி விளங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

யானை பசிக்கு சோள பொரி
இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க கண்மாயை தூர்வார வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இப்பகுதி விவசாயிகள், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டு காலங்களாக எதுவுமே நடைபெறவில்லை. ஆட்சி முடிவு பெறும் தருவாயில் கண்மாயினை நவீனப்படுத்துவதாக கூறி சுமார் ரூ.19 கோடியில் சேதமடைந்த மடைகளை சரி செய்தல், பழுதடைந்த கலுங்குகளை பழுது பார்த்தல், சிதலமடைந்த கரைகளை பலப்படுத்துதல், நீர் வரத்து வழிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை அறிவித்தனர். ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் போடுவது போல் சுமார் ரூ.2 கோடி நிதியை மட்டும் ஒதுக்கீடு செய்ததோடு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் அதிருப்பதியடைந்தனர்.

முடியும் தருவாயில் பணிகள்
அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் நிதி ஒதுக்கீடு செய்து பழுதடைந்த தலைமதகு உள்ளிட்ட மடைகளை புதிதாக கட்டியதுடன், கரைகளை சீரமைக்கும் பணியும் முடியும் தருவாயை எட்டியுள்ளது.
இதற்கிடையே ஆர்எஸ்.மங்கலம் பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியாகும். வைகையின் உபரி நீர் பாசனம் தவிர வேறு எந்த விதமான ஆற்று பாசனமோ, ஏரி பாசனமோ, ஆழ்துளை கிணற்று பாசனமோ கிடையாது. வானத்திலிருந்து மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலை உள்ளதால் இந்த ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக இப்பகுதி விவசாயிகள் நம்பியுள்ளனர். எனவே பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்கள் முழுவதையும் தூர்வாருவதுடன், கருவேல முட்புதர்களையும் அகற்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாசி தண்ணீரே நிரம்பியது
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகையில் இருந்து மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி அரசடி வண்டல், காருகுடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடையும் விதமாக அமையப்பட்டுள்ள ஒரு ஆற்று கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக வைகையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு எப்போதாவது தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் அப்படி தண்ணீர் திறந்துவிட்டால் பாண்டியூருக்கும், அரசடி வண்டலுக்கும் இடையில் உள்ள கீழ நாட்டார் கால்வாய் வழியாக நகரம் பணிதிவயல், அனுச்சகுடி, அரியான்கோட்டை வழியாக உள்ள கால்வாய் வழித்தடத்தின் வழியாகவே ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வந்து சேருவது வழக்கம்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வைகை அணையில் இருந்து தண்ணீர் மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறந்து விடப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் கீழ நாட்டார் கால்வாய் வழியாக ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்தது. ஆனால் தண்ணீர் வரத்து கால்வாயில் சில பகுதியில் முட்புதர்கள் அடர்ந்து கிடந்ததால் முழுமையாக தண்ணீர் கண்மாய்க்கு வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் கண்மாயில் கால்வாசி அளவே தண்ணீர் நிரம்பியது. எனவே தமிழக அரசு ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்கள் முழுவதையும் தூர்வாருவதுடன், கருவேல முட்புதர்களையும் அகற்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

நிதி நெருக்கடியிலும் நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி தீவிரமாக நடைபெற்று பணி முடியும் தருவாயில் உள்ளது. இது அரசின் சாதனையாகவே ஆர்எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன விவசாயிகள் கருதுகின்றனர். இதற்காக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.