பாவூர்சத்தி மேம்பாலப் பணிகளை ரயில்வே துறை விரைவில் தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி: தென்காசி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாப் பணிகளை ரயில்வே துறை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

தென்காசி – திருநெல்வேலி இடையே நான்குவழிச் சாலை பணிகள் சுமார் 430 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

இடதுபுறம் 22 பில்லர்கள், வலதுபுறம் 22 பில்லர்கள் என மொத்தம் 44 பில்லர்களுடன் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது.

தற்போது திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் இடதபுற பகுதியில், போக்குவரத்து தடைபடாமல் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில்வே தண்டவாளத்துக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு, பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பில்லர்கள் அமைத்த பகுதிகளில் பள்ளத்தை மண்ணால் நிரப்பி வருகின்றனர்.

ஒரு புறம் பாலம் அமைத்ததும் அதில் வாகனங்கள் விடப்பட்டு, மறு புறத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெறும். இதனால் போக்குவரத்துக்கு பாதிக்கப்படாமல் பணிகள் நடைபெறும். தண்டவாளத்துக்கு மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள பால பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தண்டவாளத்துக்கு மேல் அமைய உள்ள பாலப் பணிகளை ரயில்வே துறை மேற்கொள்ளும்.

ஆனால் தண்டவாளத்துக்கு மேலே உள்ள பால பகுதியை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ரயில்வே துறையும், நெடுஞ்சாலைத்துறையும் ஒரே சமயத்தில் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே பணிகள் இடையூறின்றி முடிந்து போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே ரயில்வே துறை பாலப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது: “பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருநெல்வேலி – தென்காசி நான்குவழிச் சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலத்துக்கு சரக்கு போக்குவரத்து அதிகமாக உள்ளது.

மேலும் கேரள மாநிலத்துக்கு காய்கறிகளும் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே இந்த வழியாக ஏராளமான வாகன போக்குவரத்து உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

அதிகமான போக்குவரத்து உள்ளதால் பாவூர்சத்திரத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பால பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது.

விரைவில் மழைக் காலம் தொடங்கும் என்பதால் பால பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரயில்வே துறையும், நெடுஞ்சாலைத் துறையும் ஒரே சமயத்தில் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ரயில்வே துறை பால பணிகளை இன்னும் தொடங்கவில்லை.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளை முடித்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரயில்வே துறை பால பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளதால் பல்வேறு இடையூறு ஏற்படுகிறது. அந்த நிலை பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணியிலும் ஏற்பட்டுவிடக் கூடாது. உடனடியாக ரயில்வே துறையும் பால பணிகளை மேற்கொண்டு, பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.