திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதியான நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இப்பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தினார்கள். இப்பதவிகளுக்கு போட்டியிடுவோர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 5 பேர் முன்மொழிய, 5 பேர் வழிமொழிந்தனர்.
திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.05 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.
போட்டி போட்டு மனுதாக்கல் :-
வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும், திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஆதரவாக போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக தலைமை அலுவகமான அண்ணா அறிவாலயம் முழுவதும் திமுகவினர் குவிந்தனர். அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வரும் 9ஆம் தேதி தலைவராக முதல்வர் ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார். சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் காலியான துணை பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியான நபர் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
– எம்.ரமேஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM