தசரா கொண்டாட்டம்: கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழா – சிறுவன் பலி

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்கம். இக்கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெறும். கிருஷ்ண தேவ ராயர் காலம் முதல் இவ்விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவ்விழாவில், விஜய தசமியன்று நள்ளிரவு சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு முன்பாக அப்பகுதி மக்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டை, தீப்பந்தம் போன்றவற்றால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட சாமி தரிசனம் செய்வது ஐதீகம்.

இந்த ஆண்டு தசரா நிறைவு நாளான நேற்றும்(அக்டோபர் 5) வழக்கம் போல் திருவிழா நடத்தப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவரகட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பேர் அங்கு வந்திருந்தனர். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தடிகளை பயன்படுத்தி ஒருவரை மற்றவர் தாக்குவது வழக்கம். 

அப்போது ஏற்படும் காயத்தில் இருந்து சொட்டும் ரத்தத்தை புராண காலத்தில் அந்த பகுதியில் இறைவன் வதம் செய்ததாக கூறப்படும் ராட்சசனுக்கு சமர்ப்பிப்பார்கள். இந்த ஆண்டும் வழக்கம் போல் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அலூரு மற்றும் ஆதோனி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் பங்கேற்ற ரவிந்திரநாத் ரெட்டி என்ற 14 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயம் என்ற பெயரில் அங்கு வரும் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாக தாக்கி கொள்ளும் உற்சவத்தை நடத்த போலீசார் அனுமதி தருவதில்லை. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பகுதியில் இந்த ரத்தம் சிந்தும் திருவிழா நடப்பது வருகிறது. இதில் ஒருவரை ஒருவர் பழி தீர்த்து கொள்ளும் நிகழ்வாகவும் சிலர் பயன்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.