ராஜஸ்தான் மாநிலம், நாகெளர் மாவட்டத்திலுள்ள குந்தியா கிராமத்தில் நேமாராம் மகத் (67),சாரதா (47) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சாரதா தன்னுடைய கணவன் பெயரிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றச்சொல்லி அடிக்கடி அவரை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒருமுறை சண்டை ஏற்பட்ட போது, நேமாராம் தன் மனைவியின் காலை உடைத்திருக்கிறார். அதையடுத்து நேமாராம் மனைவி அவர்மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சாரதா மூன்று மாதங்களுக்கு முன்பு தன் கணவன் பெயரில் ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். அதேபோல, தம்பதியினர் தங்கள் மகனுக்காக ரூ.20 லட்சத்தில் டிராக்டர் ஒன்றையும் வாங்கியிருக்கின்றனர். சாரதா மூன்று வருடங்களுக்கு முன்பு, நேமாராம் பெயரிலிருந்த 15 (பிகாஸ்) bighas நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிருக்கிறார். மேலும், தன் கணவனையும் கொல்ல சதித்திட்டமும் தீட்டி வந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதனால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நேமாராம் குடிபோதையில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது நேமாராமுக்கும் சாரதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நேமாராம் சாரதாவை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதன் பிறகு போதையில் மயங்கி விழுந்த அவரை சாரதா கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டார். இன்சூரன்ஸ் பணத்துக்காகத்தான் இந்தக் கொலையை அவர் செய்திருப்பதாக நேமாராம் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தன்னுடைய கணவரைக் கொலைசெய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவர்மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். இன்சூரன்ஸ் தொகைக்காக கணவனை மனைவியே கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.