சந்தை தொடர்பை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (07) யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் USAID SCORE PROJECT நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சர்வோதய நிறுவனத்தின் பங்களிப்பில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
USAID நிறுவனத்தின் ஆறு இலட்சம் பெறுமதியான நிதியுதவியை பெற்று யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 06 சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் தொழில் நிறுவனங்களுக்கு இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு தொழில் முயற்சியாளர்களும் தாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், தொழில் நிறுவனங்களில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள், உற்பத்தி பொருட்களில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் குறிப்பிட்டார்.
கைத்தொழிலை ஆரம்பிப்பதோடு அவர்களின் தொழில் தொடர்பான பின்னூட்டலை பெற்றுக் கொள்ளல், நன்கொடையாக கிடைக்கும் உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தல் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் என்பன தொடர்பாகவும் மேலதிக அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.
சிறு தொழில் முயற்சியாளர்கள் உற்பத்தி பொருட்களில் மேம்படுத்த வேண்டிய விடயங்கள், எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.