வடகிழக்கு பருவமழை: 10ம் தேதி மின்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 10ந்தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, முன்னேற்பாடு பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி; சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் நேரடியாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏற்கனவே மின்சாரத்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தவர், அதற்காக  சென்னையில் 9500 கிலோ மீட்டர் அளவில் கம்பிகள் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், 2400 பில்லர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும், நடைபெற இருக்கும், ஆய்வுக்கூட்டத்தில், புதைவட கம்பிகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின்நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருத்தல், அனைத்து மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் கழிவுநீர் உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, இறுதிக்கட்டத்தில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்படும் என்றவர்,  மின்னகத்தில் ஒரே நேரத்தில் தற்போது 60 அழைப்புகள் பேசக்கூடிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து அதிக அழைப்புகள் வரும் என்பதால் அதனை 75 ஆக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.