மோகாதிஷு: சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக அங்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வரும் துயர நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் சோமாலியாவில் நிலைமை மிக மோசமாகியுள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலியாவில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 43 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். கடும் வறட்சி காரணமாக குதிரைகள், வரிக் குதிரைகள் ஆகியவை ஆங்காங்கே மடித்து கிடக்கின்றன.
இந்த நிலையில், ஐ. நா சமீபத்திய அறிக்கையில், “ ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வரும் 5 வயதுக்குட்பட்ட 900 குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். மேலும் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டுச் சண்டைகள், மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன. இதில் தெற்கு சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்தான் கடும் வறட்சிக்கு எதிராக சோமாலியா அரசு அவசர நிலையை அறிவித்தது. எனினும் 8 மாதங்கள் கடந்தும் சோமாலியாவில் நிலைமை சீராகவில்லை. கடந்த சில வருடங்களில் மட்டும் சோமாலியாவில் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகின்றது.