தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள ஆன்லைன் ரம்மி தடைக்கு எதிரான சட்டம் அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஆன்லைன் ரம்மி தொடர்பான தற்கொலைகள் நடந்து வருகிறது. அதுவும் முதன்முதலாக ஒரு பெண் ஆன்லைன் ரம்மியால் பணம் இழந்து தற்கொலை செய்துகொண்ட கொடுமையும் தமிழகத்தில் அரங்கேறியது.
கடந்த மாதம் ஜூனில் மணலியை சேர்ந்த பவானி என்ற தனியார் நிறுவன ஊழியர் ஆன்லைன் ரம்மியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடி அதில் நஷ்டம் ஏற்படவே வீட்டில் இருந்த 20 சவரன் நகைகளையும் விற்று ரம்மி விளையாடியுள்ளார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகமானதால் கணவன் வீட்டில் இருந்தபோதே வேறொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதனை தொடர்ந்து கடைசியாக இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த எஞ்சினியரிங் மாணவன் சந்தோஷ் வீட்டில் இருந்த நகையை அடமானம் வைத்து ரம்மி விளையாடி தோற்றுள்ளார். அதனால் மனமுடைந்த மாணவர் மணப்பாறை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி நாளெங்கும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆன்லைன் ரம்மியை அடியோடு தடை செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிக்கையை ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அதுவும் கிடப்பில் இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 17ம் கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்திற்கான மசோதாவை அந்த துறை அமைச்சரோ அல்லது முதல்வரோ தாக்கல் செய்வார். அது, சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்துக்கு கொண்டு வந்து குரல் வாக்கெடுப்பு நடக்கும். அப்போது சட்ட மசோதா இயற்றப்பட்டால் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகே தமிழகத்தில் நிரந்தரமாக ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் அமலுக்கு வரும்.