நெல்லை: பாளையில் இந்த ஆண்டு தசரா திருவிழா, ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோயில்களில் தசரா விழா துவங்கி நடைபெற்று வந்தது. ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், யாதவர், விஸ்வகர்மா, கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோயில்களிலும் அம்மன், தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி கொலு வீற்றிருக்கும் வைபவம் நடந்தது.
இதைதொடர்ந்து விஜயசதமியையொட்டி பாளையில் உள்ள 12 அம்மன் கோயில்களிலும் கடந்த 5ம்தேதி நள்ளிரவு அம்மன் சப்பர பவனி துவங்கியது. தொடர்ந்து 12 அம்மன் சப்பரங்களும் பல்வேறு தெருக்களில் வலம் வந்தது. பெருமாள், சிவன் உள்ளிட்ட 8 ரதவீதிகளிலும் வலம் வரும் வைபவம் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று காலையில் 12 அம்மன் சப்பரங்களும் பாளை ராமசாமி கோயில் திடல், ராஜகோபால சுவாமி கோயில் திடல், பாளை சிவன் கோயில் பகுதியிலும், மாலையில் மார்க்கெட் பகுதியில் 12 சப்பரங்களும் அணிவகுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு நிறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பாளை சமாதானபுரம் எருமைக்கிடா மைதானத்தில் மாரியம்மன் கோயில் எதிரில் 12 அம்மன் சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இதையொட்டி பாளை பகுதியில் ஏரளானமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.