சண்டிகர்: காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான சம்பவத்தின் தொடர்ச்சியாக அரியானாவில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்னைக்குரிய மருந்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில், இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள், இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி, சோனிபட், சண்டிகரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மாநில சுகாதாரத் துறையின் குழுக்கள் சோதனை நடத்தினர். அரியானா மருந்துக் கட்டுப்பாட்டாளர் மன்மோகன் தனேஜா தலைமையிலான குழுவினர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து அரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜி கூறுகையில், ‘நான்கு இருமல் மருந்துகளும் ஏற்றுமதிக்காக மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருந்துகள் இந்தியாவில் விற்கப்படவில்லை. தற்போது நான்கு இருமல் மருந்துகளின் ஐந்து மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு (சிடிஎல்) அனுப்பப்பட்டுள்ளன’ என்றார். மேலும், இதுகுறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கூறுகையில், ‘சிடிஎல் அறிக்கை கிடைத்த பிறகே எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். தவறு ஏதும் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விவகாரம் குறித்து ஒன்றிய அரசு விசாரித்து வருகிறது’ என்றார். அரியானாவில் மூத்த சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மருந்து நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மாதிரி அறிக்கை வரும் வரை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.