காஞ்சிபுரம் – திருத்தணி சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – திருத்தணி சாலையில்  மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு  பாதுகாப்பற்ற முறையில் பணி செய்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால்  இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வரை 45 கிமீ தூரத்தில் 7 மீட்டர் அகல சாலை உள்ளது. குறுகிய சாலையாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 10 மீட்டர் அகல சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.380 கோடி செலவில் பணி நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அதன்மீது மண் கொட்டப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து வெள்ளைகேட் வரை சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் இந்த சாலை வழியாக அரக்கோணம்  வந்து, அங்கிருந்து திருப்பதி, திருத்தணி கோயில்களுக்கு செல்கின்றனர்.

மேலும் கூரம், ஈஞ்சம்பாக்கம், சேந்தமங்கலம், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக மேற்கண்ட சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் அருகில் எச்சரிக்கை பலகை  வைக்காததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு பணி  முடிந்து வீடு திரும்பிய அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, காஞ்சிபுரம்-திருத்தணி சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை பாதுகாப்பு ஏற்பாடு செய்வதுடன், எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.