மணிநகர்: குஜராத்தில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முற்பகுதி சேதமடைந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வழிதவறி வந்த நான்கு எருமை மாடுகள் மீது ரயில் மோதியதால், இன்ஜினின் முற்பகுதி சேதமடைந்தது. அதேநேரம், விபத்தில் சிக்கிய எருமைகள் உயிரிழந்தன.
இந்த நிலையில், எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். எனினும், அவர்கள் இதுவரை எருமை மாடுகளின் உரிமையாளர்களை அடையாளம் காணவில்லை எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடத்தில் குறுக்கிட்ட எருமைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை மேற்கு ரயில்வேயின் அகமதாபாத் பிரிவு செய்தித்தொடர்பாளர் உறுதி செய்தார். 1989 ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த ரயிலின் முகப்பு சீர் செய்யப்பட்டு, மீண்டும் சேவையை வந்தே பாரத் ரயில் தொடங்கியுள்ளது.
மேலும், வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து வழிகளையும் ரயில்வே முன் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குஜராத் தலைநகர் காந்திநகர் மற்றும் மும்பைக்கு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தை சுமார் 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். வைஃபை, 32 இன்ச் டி.வி போன்ற வசதிகள் இதில் உள்ளன. கடந்த மாதம் 30-ம் தேதி தான் இந்த ரயில் துவக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.