நெட்பிளிக்ஸ் தளத்தின் ‘மணி ஹெய்ஸ்ட்‘ தொடர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகவும் வரவேற்பை பெற்றது. ஐந்து சீசன்கள் கொண்ட மணி ஹெய்ஸ்ட் தொடர் மொத்தம் 41 எபிசோட்கள் இருக்கிறது.
அரசு அதிகாரங்களுக்கு எதிராக, அதன் முக்கிய வங்கி மற்றும் வருவாய் நிறுவனங்களில் ஒரு குழு கொள்ளை அடிக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர், அரச அடக்குமுறைக்கு எதிரான கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டுசேர்த்தது. தொடரின் பிரபோஸர், பெர்லின், டோக்கியோ, நைரோபி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
சமூக வலைதளங்களில் இந்த கதாபாத்திரங்களில் பெயர்களில் லட்சக்கணக்கான கணக்குகள் உள்ளன. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் செல்வாக்கை செலுத்தி வருகிறது எனலாம்.
ஐந்தாம் சீசனின் கடைசி எபிஸோட் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில், அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது, நெட்பிளிக்ஸ் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதாவது, தொடரின் முக்கிய கதாபாத்திரமான ‘பெர்லின்’-ஐ தனியாக தொடர் ஒன்றை தயாரிக்க நெட்பிளிக்ஸ் திட்டமிட்டது. இந்நிலையில், பெர்லின் தொடரின் 53 வினாடி டீசர் ஒன்றை நெட்பிளிக்ஸ் நேற்று வெளியிட்டது.
மணி ஹெய்ஸ்ட் கதையில் நிகழும் கொள்ளைக்கு மூளையாக இருக்கும் பெர்லின் குறித்தும், அவர் அந்த கொள்ளையை திட்டமிடுவதற்கான காரணம், அவருக்கும் பிரபோஸருக்கும் இடையிலான தொடர்பு, பெர்லின் இளமை கால வாழ்வு ஆகியவை குறித்தும் ‘பெர்லின்’ தொடரில் கூறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரில், தொடரின் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெர்லின் தொடர் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மணி ஹெய்ஸ்ட் ஆறாம் சீசன் குறித்த அப்டேட் ஏதும் வெளியாகவில்லை.