தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையில் சொந்தமாக ஸ்ரீ என்டர்பிரைசர்ஸ் எனும் பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். பட்டாசுக் கடையை ராஜலட்சுமியின் கணவர் ராஜேஷ் கடந்த இரண்டு வருடங்களாக நிர்வகித்து வருகிறார். தீபாவளி சீசனையொட்டி, ராஜலட்சுமியின் பட்டாசுக்கடையில் நல்ல வியாபாரம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றும், பட்டாசு வியாபாரத்தை முடித்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ராஜேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அவர் வந்தபோது கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் கதவு உடைக்கபட்டு கடையில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, கொள்ளைச் சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீஸாருக்கு ராஜேஷ் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளை நடைபெற்ற கடையில் ஆய்வு செய்தனர். அப்போது ராஜேஷிடம் நடத்திய விசாரணையில் கடையின் ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள், கல்லாவிலிருந்த 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த 2.50 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் என 4 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் திருடப்பட்ட ராஜேஷின் காரிலேயே எடுத்துப்போட்டு கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தங்களின் அடையாளங்களை காவல்துறையினர் கண்டு பிடித்துவிடக்கூடாது என்பதற்காக பட்டாசுக் கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா மற்றும் வீடியோ பதிவு ஸ்டோரேஜ்களையும் தூக்கிச்சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்ற கடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் உதவியுடனும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், மோப்பம் பிடித்தப்படியே சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பட்டாசுக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டாசுக் கடையில் கொள்ளையடித்தவர்கள் குறித்து அருகில் உள்ள பட்டாசு கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமராப்பதிவுகளைக் கொண்டு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சாத்தூர்-சிவகாசி சாலையில் செயல்பட்டு வரும் பட்டாசுக் கடைகளில் இதுபோன்று விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இரவு நேரங்களில் போலீஸார் கூடுதலாக ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.