தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை ஆளும் திமுக அரசு தரப்பில் சபையில் வைக்கப்பட உள்ளது.
இதேபோன்று தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.
இவற்றைவிட முக்கியமாக, கூட்டத்தொடரில்
, இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சபையில் எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதிமுக தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
ஐந்து மாதங்களுக்கு முன்புவரை, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரின் தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருந்தவரை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான இபிஎஸ் மற்றும் துணைத் தலைவரான ஓபிஎஸ் இருவருக்கும் சபையின் மரபுப்படி முன்வரிசையில் இருக்கைகள் அளிக்கப்பட்டு வந்தன.
ஆனால் அதிமுகவி்ல் ஒற்றை தலைமை யுத்தம் எழுந்ததையடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக மாறி, மாறி அறிவித்து கொண்டனர்.
அத்துடன் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்ககளான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை இபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்குவதாகவும் அறிவித்திருந்தார். மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இபிஎஸ்சின் இந்த முடிவு குறித்து அதிமுக கொறடா எஸ்பி. வேலுமணியும் கடிதம் மூலம் சபாநாயகர அப்பாவுவிடம் தெரிவி்த்துள்ளார். இதேபோன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இபிஎஸ அன்கோவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து சபாநாயகருக்கு முறைபடி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இருதரப்பினரும் அளித்துள்ள கடிதத்தை மாதக்கணக்கில் தன்வசம் வைத்து கொண்டிருக்கும் சபாநாயகர், அவற்றின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் விரைவில் சபை கூட உள்ளது. அப்போது, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கட்சிரீதியாக தான் எடுத்துள்ள முக்கிய முடிவுகளை சபாநாயகர் கருத்தில் கொண்டு உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று இபிஎஸ் சபையில் குரல் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் ஓபிஎஸ் ஸுக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம் அளிக்க வேண்டும் எனவும், கட்சியி்ல் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை அதிமுக எம்எல்ஏக்களுடன் சேர்த்து அமர வைக்கக் கூடாது என்றும் இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது.
பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், இதுதொடர்பான மனு தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளதால், இபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை சபாநாயகர ஏற்க கூட்ாது என ஓபிஎஸ் குரல் எழுப்ப வேண்டிவரும் எனவும் தெரிகிறது. இவ்விரு தரப்பினரின் கோரிக்கைகளில் யாருடைய கோரிக்கைக்கு சபாநாயகர் அப்பாவு செவிசாய்ப்பார் என்பதே தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.
‘ஓபிஎஸ், இபிஎஸ் விஷயத்தில் தமக்குள்ள அதிகாரத்தின்படியும், சபை மரபுப்படியும் முடிவெடுப்பேன் எனவும், அந்த முடிவு என்ன என்பது சபை கூடும் நாளன்று தெரியும்’ என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. சபாநாயகரின் முடிவு எதுவாக இருந்தாலும் சரி… சபையில் சம்பவம் எதுவும் நடக்காமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.