பிற மதங்களுக்கு மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து கோரிக்கை – ஆராய 3 நபர் கமிஷன் அமைப்பு

புதுடெல்லி: மற்ற மதங்களுக்கு மாற்றப்பட்ட பட்டியலின மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

மதம் மாறிய பட்டியலின கிறிஸ்தவர்களும், பட்டியலின முஸ்லிம்களும் தங்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சுஷ்மா யாதவ் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின் ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்குள் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கால நிர்ணயமும் செய்துள்ளது.

இதனிடையே, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டியலினத்தவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக மற்றும் பிற அந்தஸ்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிற மதங்களுக்கு மாறும்போது ஏற்படும் மாற்றங்களையும் மூன்று நபர் ஆணையம் ஆராயும். கூடுதலாக, மதம் மாறியவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவதால் நாட்டில் தற்போது பட்டியலினத்தவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராயவும் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1950ம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே எஸ்சிகளாக அங்கீகரிக்க அனுமதிக்கிறது. இதனை எதிர்த்து பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்களில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.